மக்காச்சோளத்தில் களைக் கட்டுப்பாடு: சரியான நேரத்தில் சரியான களைக்கொல்லியைப் பயன்படுத்துங்கள்

மக்காச்சோளத்தில் களைக் கட்டுப்பாடு: சரியான நேரத்தில் சரியான களைக்கொல்லியைப் பயன்படுத்துங்கள்

ஆரோக்கியமான மக்காச்சோளப் பயிர் வளர்ச்சிக்கும் அதிக விளைச்சலுக்கும் ஆரம்ப கட்ட களைக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். குறிப்பாகப் பயிரின் ஆரம்ப வளர்ச்சி நிலைகளில், களைகள் மக்காச்சோளத்துடன் ஊட்டச்சத்துகள், நீர், சூரியஒளி மற்றும் வளர்ச்சிக்கான இடம் ஆகியவற்றிற்குப் போட்டியிடுகின்றன. சரியான நேரத்தில் வயலில் காணப்படும் களைகளின் வகைகளுக்கு ஏற்ற களைக்கொல்லிகளைப் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த களைக் கட்டுப்பாட்டைப் பெறலாம்.

மக்காச்சோளம் அதன் ஆரம்ப வளர்ச்சி நிலைகளில் களைகளின் போட்டியால் அதிகம் பாதிக்கப்படக்கூடியது. இதனால் பயிர் நிலைபெறுதல், செடிகளின் வளர்ச்சி வீரியம், வேர் வளர்ச்சி, கதிர் உருவாக்கம் மற்றும் மணி பிடிப்பு ஆகியவை பாதிக்கப்படலாம். விதைத்த நான்கு முதல் ஆறு வாரங்கள் களைக் கட்டுப்பாட்டிற்கு மிகவும் முக்கியமான காலமாகும். எனவே, இந்தக் காலகட்டத்தில் வயலைக் களைகளின்றி பராமரிப்பது ஆரோக்கியமான பயிர் வளர்ச்சிக்கும் அதிக மகசூலுக்கும் அவசியம். எல்லா களைக்கொல்லிகளும் எல்லா வகையான களைகளையும் கட்டுப்படுத்துவதில்லை. வயலில் அதிகமாக உள்ள களைகளை அடையாளம் காணாமல் களைக்கொல்லியைத் தேர்ந்தெடுத்தால், களைக் கட்டுப்பாடு சரியாக அமையாமல் போகலாம்; தேவையற்ற செலவு ஏற்படலாம்; தேவையற்ற மற்றும் அளவுக்கதிகமான களைக்கொல்லி பயன்பாடு பயிர் மற்றும் மண்ணிற்கு பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மக்காச்சோள வயல்களில் காணப்படும் முக்கிய களைகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: அகன்ற இலைக் களைகள், புல்வகைக் களைகள் மற்றும் கோரை வகைக் களைகள். புல்வகைக் களைகள் அதிகமுள்ள வயலுக்குத் தேவையான கட்டுப்பாட்டு முறை, அகன்ற இலைக் களைகள் அல்லது கோரை வகைக் களைகள் அதிகமுள்ள வயலுக்கான முறையிலிருந்து மாறுபடும். மக்காச்சோளத்தில் களைகளைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை விரிவாகப் பார்க்கலாம். 1. கைக்களையெடுத்தல்: முக்கியமான மற்றும் நம்பகமான நடைமுறை மக்காச்சோளத்தில் விதைத்த 15–20 நாட்களுக்குப் பிறகு கைக்களையெடுத்தல் அல்லது வரிசைகளுக்கு இடையே மண்வெட்டி கொண்டு களையெடுத்தல் மிகவும் பரிந்துரைக்கப்படும் களைக் கட்டுப்பாட்டு முறையாகும். இதனால், • களைகளைத் திறம்பட அகற்றலாம். • மேல்மண் தளர்வதால் மண்ணில் காற்றோட்டமும் நீர் ஊடுருவும் திறனும் மேம்படும். • மழையால் ஏற்படும் மண்ணின் மேற்பரப்பு இறுக்கத்தை உடைக்க உதவுகிறது. • மீண்டும் மீண்டும் களைக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தைக் குறைக்கிறது. மீண்டும் களைகள் முளைத்தால், விதைத்த 30–35 நாட்களில் இரண்டாவது முறையாகக் களையெடுக்க வேண்டியிருக்கும். கைக்களையெடுத்தல் சாத்தியமில்லாத சூழலில், பொருத்தமான முளைதற்கு முன் மற்றும்/அல்லது முளைத்த பின் களைக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம். 2. முளைப்பதற்கு முந்தைய களைக் கொல்லிகள் இவை பெரும்பாலான களைகளின் விதைகள் முளைப்பதையும், ஆரம்ப வளர்ச்சியையும் தடுத்து, மக்காச்சோளத்தின் ஆரம்ப வளர்ச்சிக் காலத்தில் களைகளால் ஏற்படும் போட்டியைக் குறைக்க உதவுகின்றன. 2.1 பெண்டிமெத்தலின் அல்லது மெட்டோலாக்ளோர் இந்தக் களைக்கொல்லிகள் முளைக்கும் நிலையில் உள்ள கட்டுப்படுத்தக்கூடிய புல்வகைக் களைகளையும், பல அகன்ற இலைக் களைகளையும் கட்டுப்படுத்த உதவுகின்றன. கோரை போன்ற கடினமான சில களைகளை முளைப்பதற்கு முன் தெளிக்கப்படும் களைக்கொல்லிகள் மூலம் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். 2.2 அட்ரசின் மக்காச்சோளத்தில் களைகளைக் கட்டுப்படுத்தப் பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் களைக்கொல்லிகளில் அட்ரசினும் ஒன்று. இது முளைப்பதற்கு முன்பும் முளைத்த பின்பும் செயல்படும் தன்மை கொண்டது; குறிப்பாகப் பல அகன்ற இலைக் களைகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இருப்பினும், புல்வகைக் களைகளையும் கோரை வகைக் களைகளையும் அட்ரசின் கட்டுப் படுத்தாது. முளைத்த பின் தெளிக்கப்படும் பிற களைக்கொல்லிகளுடன் அட்ரசின் கலவையாகப் பயன்படுத்தப்படுவதால், ஆரம்ப கட்டத்தில் பெரும்பாலான களைகளைக் கட்டுப்படுத்த உதவும் பெண்டிமெத்தலின் அல்லது மெட்டோலாக்ளோரை முளைப்பதற்கு முன் தெளிப்பது சிறந்த தேர்வாக இருக்கும். முளைப்பதற்கு முன் களைக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்: • பொருளின் லேபிள் மற்றும் உள்ளூர் வேளாண் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் தெளிக்க வேண்டும் (பொதுவாக விதைத்த மூன்று நாட்களுக்குள்). • வயலில் களைகளின் விதைகள் முளைப்பதற்கு முன்பே தெளிக்க வேண்டும். • களைக்கொல்லி சிறப்பாகச் செயல்பட மண்ணில் போதுமான ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 3. முளைத்த பின் களைக் கட்டுப்பாடு 3.1 டெம்போட்ரையோன் + அட்ரசின் டெம்போட்ரையோன் என்பது மக்காச்சோளத்தில் பலவகையான அகன்ற இலைக் களைகளையும் புல்வகைக் களைகளையும் கட்டுப்படுத்தப் பயன்படும் தேர்ந்தெடுத்துச் செயல்படும் முறையான முளைத்த பின் தெளிக்கும் களைக்கொல்லியாகும். சிறந்த களைக் கட்டுப்பாட்டைப் பெற, டெம்போட்ரையோன், செயலூக்கி (activator) மற்றும் அட்ரசின் ஆகியவற்றை லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளின்படி சரியான முறையில் கலக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவிலும் சரியான தெளிப்பு முறைகளிலும் பயன்படுத்தும்போது, டெம்போட்ரையோன் மக்காச்சோளப் பயிருக்கு பாதுகாப்பானதாகும். 3.2 மெசோட்ரையோன் + அட்ரசின் இது தயார் நிலைக் கலவையாகக் கிடைக்கிறது. எனவே, டெம்போட்ரையோனைப் பயன்படுத்தும்போது தனித்தனியாகத் தேவையான மருந்துகளைக் கலக்க வேண்டியிருப்பதைப் போல இதற்குத் தேவையில்லை. அதிக அளவு பயன்படுத்துதல், பொருந்தாத மருந்துகளைக் கலத்தல் அல்லது பயிர் அழுத்தமான சூழ்நிலையில் தெளித்தல் ஆகியவை இலைகளில் தற்காலிக வெளிறல் அல்லது கருகலை ஏற்படுத்தலாம். மக்காச்சோளப் பயிர் நீர்ப்பற்றாக்குறை போன்ற அழுத்தத்தில் இருக்கும்போது தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். தவறான கையாளுதலால் ஏற்படும் சிறிய அளவிலான இலை வெளிறல் அல்லது கருகல், டெம்போட்ரையோனை விட மெசோட்ரையோன் அடிப்படையிலான களைக்கொல்லிகளில் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. 3.3 இச் கிராஸ் (அரிப்பு பில் / சொணைப் பில்) கட்டுப்பாட்டிற்கு டோல்பைரலேட் + அட்ரசின் இச் கிராஸ் (Rottboellia cochinchinensis) அதிகமாகக் காணப்படும் வயல்களில் இந்தக் கலவையைப் பயன்படுத்தலாம். இந்தக் களைகள் 2–4 இலைப் பருவத்தில் இருக்கும்போது தெளித்தால் மட்டுமே நல்ல கட்டுப்பாட்டைப் பெற முடியும். நன்கு வளர்ந்த இச் கிராஸ் செடிகளைக் கட்டுப்படுத்துவதில் இதன் செயல்திறன் வெகுவாகக் குறையும். 3.4 ஊதா கோரை மற்றும் பிற கோரை வகைகளைக் கட்டுப்படுத்த ஹாலோசல்ஃபியூரான்-மெத்தில் பொதுவாகக் கோரை வகை புற்களைக் கட்டுப்படுத்துவது கடினம். அவற்றின் வளர்ச்சி இயல்பும் மீண்டும் துளிர்விடும் தன்மையும் இதற்குக் காரணமாகும். கோரை வகைக் களைகளைக் கட்டுப்படுத்த ஹாலோசல்ஃபியூரான்-மெத்தில் சிறந்த தேர்வாகும். பரிந்துரைக்கப்பட்ட தெளிப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும். கோரைச் செடிகள் முழுமையாகக் காய்ந்து அழிவதற்கு 10–15 நாட்கள் ஆகலாம். இருப்பினும், பிற களைக்கொல்லிகளுடன் ஒப்பிடும்போது இதன் மூலம் மிகச் சிறந்த கட்டுப்பாட்டைப் பெறலாம். இது கோரைக்கான தனிப்பட்ட களைக்கொல்லியாகும். வயலில் உள்ள பிற புல்வகை மற்றும் அகன்ற இலைக் களைகளை இது கட்டுப்படுத்தாது. 4. அதிகமான களைகள் இருக்கும்போது 2,4-D சேர்க்கலாமா? மக்காச்சோளத்தில் சில கட்டுப்படுத்தக் கடினமான அகன்ற இலைக் களைகளைக் கட்டுப்படுத்த, உரிய பரிந்துரைகளின்படி 2,4-D மருந்து வகைகளைப் பயன்படுத்தலாம். இருப்பினும், டெம்போட்ரையோன்–அட்ரசின் அல்லது வேறு களைக்கொல்லிக் கலவையுடன் 2,4-D-ஐ தானாகவே சேர்க்கக் கூடாது. அகன்ற இலைக் களைகள் மிக அதிகமாகக் காணப்படும் சூழலில், பயிர் 20 நாட்களைக் கடந்த பிறகு மட்டுமே குறைந்த அளவு 2,4-D-ஐ டெம்போட்ரையோனுடன் கலக்கலாம். முளைத்த பின் தெளிக்கப்படும் களைக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை: • களைகள் 2–4 இலைப் பருவத்தில் இருக்கும்போது தெளிப்பது சிறந்த கட்டுப்பாட்டைப் பெற உதவும். • மண்ணில் போதுமான ஈரப்பதம் இருக்க வேண்டும். • தெளித்த உடனேயே பெய்யும் கனமழை களைக் கட்டுப்பாட்டின் செயல்திறனைக் குறைக்கலாம். • பரிந்துரைக்கப்பட்ட அளவு மற்றும் கலவை வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.