கண் வடிவ பழ அழுகல் நோய் — தக்காளி
Phytophthora parasitica and P. capsici
அறிகுறிகள்
பச்சை மற்றும் பழுத்த காய்களில், குறிப்பாக பூ முனைப் பகுதியில் (காய்களின் அடிப் பகுதி), பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடர் பழுப்பு மற்றும் வெளிர் பழுப்பு நிறப் பட்டைகள் மாறி மாறி, ஒரே மையத்தைச் சுற்றிய வளையங்கள் போன்று காணப்படும். காயின் வெளிப்புறம் உறுதியாகவும் வழுவழுப்பாகவும் இருக்கும். ஆனால் உட்புறத்தில் அழுகிய திசுக்கள் மிருதுவாகவும் கூழ் போன்றும் மாறும். பாதிக்கப்பட்ட பகுதிகள் பெரிதாகி, காயின் பாதிக்கும் மேற்பட்ட பகுதியை ஆக்கிரமிக்கக்கூடும். இளம் பச்சைக் காய்கள் சுருங்கி, வளர்ச்சி இல்லாமல் காய்ந்து போகலாம். ஈரப்பதம் அதிகமாக இருக்கும் சூழலில், பாதிக்கப்பட்ட காய்களின் மீது வெள்ளை நிறப் பஞ்சு போன்ற பூஞ்சை வளர்ச்சி தோன்ற வாய்ப்புள்ளது. மண்ணைத் தொட்டுக்கொண்டிருக்கும் அல்லது மண்ணுக்கு அருகில் இருக்கும் காய்கள் இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இந்த பூஞ்சைத் தாக்குதலால் நாற்றுகளில் நாற்றழுகல் ஏற்படலாம். மேலும், வெவ்வேறு வயதுடைய செடிகளில் வேர் அழுகல் மற்றும் கழுத்துப்பகுதி அழுகல் ஏற்படலாம். பாதிக்கப்பட்ட வேர்களில் பழுப்பு நிறத்தில், நீர் தேங்கியதுபோன்ற அழுகல் தோன்றி, அவை தண்டின் அடிப்பகுதி வரை பரவும். கடுமையாக பாதிக்கப்பட்ட வேர்களின் திசுக்கள் இறந்து அழுகிய நிலையில் காணப்படும். இளம் செடிகளில் வேர் மற்றும் கழுத்துப்பகுதி பாதிக்கப்படுவதால், செடிகள் விரைவாக வாடிவிடும். தண்டுகளில் வெளிர் பச்சை அல்லது பழுப்பு நிறமான நீளமான அழுகல் போன்ற பகுதிகள் தோன்றும். இவை 15 செ.மீ.க்கும் அதிக நீளமாக இருக்கலாம். ஈரமான சூழலில், தண்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நுண்ணிய பூஞ்சை வளர்ச்சி காணப்படலாம். தண்டைச் சுற்றி நோய்த் தாக்குதல் முழுமையாகப் பரவுவதால், நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களின் கடத்தல் தடைபட்டு, செடிகள் வாடி இறக்கக்கூடும். இந்த நோய் நேரடியாக இலைகளைத் தாக்கா விட்டாலும், தொடர் மழை மற்றும் வெப்பமான சூழலில் இலைக் கருகல் மற்றும் இலை உதிர்வு ஏற்படலாம். இதனைத் தொடர்ந்து செடிகள் முழுமையாக வாடி அழியக்கூடும்.