நாற்று அழுகல் நோய்

நாற்று அழுகல் நோய்

காரண உயிரி

Pythium spp., Phytophthora spp., Fusarium spp., Rhizoctonia solani and other fungi

அறிகுறிகள்

🫘 முளைப்புக்கு முந்தைய நிலை • நாற்றுகள் மண்ணின் மேற்பரப்பிற்கு மேலே வருவதற்கு முன்பே இறந்துவிடுகின்றன. • இளம் முளைவேர் மற்றும் முளைக்குருத்து ஆகியவை அழுகி விடும். • நாற்றுகள் முளைத்து வராமல் முழுமையாக அழுகிவிடலாம். 🌱 நாற்று நிலை •தரை மட்டத்தில் உள்ள நாற்றின் அடிப்பகுதியில் உள்ள திசுக்களில் தொற்று ஏற்படுகிறது. •தொற்றுக்குள்ளான திசுக்கள் மென்மையாகவும், நீர் கோர்த்தது போலவும் மாறுகின்றன. •நாற்றுகள் சரிந்து அல்லது முறிந்து விழுந்து இறந்து விடும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

முன் இலை கருகல் நோய்

முன் இலை கருகல் நோய்

காரண உயிரி

Alternaria solani

அறிகுறிகள்

முக்கியமாக முதிர்ந்த இலைகளில் சிறிய, கருப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். இப்புள்ளிகள் பெரிதாகி, காளைக் கண் (bull's-eye) அமைப்பை ஒத்த கொண்ட வட்ட வடிவிலான தொடர் வளையங்களை உருவாக்குகின்றன. புள்ளிகளைச் சுற்றியுள்ள திசுக்கள் மஞ்சள் நிறமாக மாறக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள நிலைகளில், செடியின் இலைப்பகுதிகள் பெருமளவில் கருகி அழியக்கூடும். தண்டில் தோன்றும் புள்ளிகளும் இலைகளில் உள்ளதைப் போலவே இருக்கும், மேலும் அவை மண் பரப்பை ஒட்டியுள்ள செடியின் அடிப்பகுதியைச் சுற்றி வளையமாகப் பரவக்கூடும். பழங்களில் பெரிய தழும்புகள் உருவாகும், பொதுவாக இவை பழக்காம்பு அல்லது செடியோடு இணைந்திருக்கும் பகுதிகளில் தோன்றும். பழங்களில் உள்ள தழும்புகள் கிட்டத்தட்ட முழுப் பழத்தையும் பாதிக்கக்கூடும், மேலும் இவையும் தொடர் வட்ட வளையங்களைக் கொண்டிருக்கும்.

பரிந்துரைகள் (8)
அசோக்சிஸ்ட்ரோபின் 11% + டெபுகோனசோல் 18.3% w/w (SC)
அசோக்சிஸ்ட்ரோபின் 8.3% + மான்கோசெப் 66.7% (WG)
டெபுகோனசோல் 38.39% w/w (SC)
சைப்ரோகோனசோல் 12.5% + டெபுகோனசோல் 12.5% (SC)
போஸ்காலிட் 25.2% + பைராக்ளோஸ்ட்ரோபின் 12.8% (WG)
மெட்டிரம் 55% + பைராக்ளோஸ்ட்ரோபின் 5% (WG)
பமோக்சாடோன் 16.6% + சைமோக்சானில் 22.1% (SC)
பிளக்சாபைராக்சாட் 75 g/l + டைஃபெனோகோனசோல் 50 g/l (SC)

பின் இலை கருகல் நோய்

பின் இலை கருகல் நோய்

காரண உயிரி

Phytophthora infestans

அறிகுறிகள்

செடியில் மண்ணுக்கு மேலுள்ள அனைத்துப் பகுதிகளும் இந்நோயால் பாதிக்கப்படலாம். இலைகளில் ஆரம்பத்தில் சுமார் 2–10 மி.மீ. அளவுள்ள, சிறியது முதல் நடுத்தர அளவு வரையிலான ஒழுங்கற்ற வடிவிலான வெளிர் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். சில சமயங்களில் இவற்றில் ஊதா நிறச் சாயலும் காணப்படும். நோய்ப் புள்ளிகளின் ஓரங்கள் வெளிர் பச்சை நிறமாகவோ அல்லது நீரில் நனைந்தது போன்ற தோற்றத்துடனோ காணப்படும். நோய்ப் புள்ளிகள் பெரிதாகி ஒன்றோடொன்று இணைந்து வேகமாகப் பரவும். இதனால் முழு இலைகளும் கருகியது போல் இறக்கக் கூடும்.. ஈரப்பதம் அதிகமாக உள்ள சூழலில், இலையின் அடிப்பகுதியில் நோய்ப் புள்ளிகளின் ஓரங்களில் வெள்ளை நிறப் பூஞ்சை வளர்ச்சி பஞ்சு போன்ற தோற்றத்தில் காணப்படும். சாதகமான தட்பவெப்ப நிலைகளில் (தொடர் மழை அல்லது மேகமூட்டம், அதிக பனி, காற்றில் அதிக ஈரப் பதம்) நோய் மிக வேகமாகப் பரவி, சுமார் இரண்டு வாரங்களுக்குள் வயல் முழுவதும் கடுமையான இலை உதிர்வை ஏற்படுத்தக்கூடும். வறண்ட காலநிலையில், பாதிக்கப்பட்ட தாவரங்களின் இலைகள் கருகியதுபோன்ற தோற்றத்துடன் சுருங்கி வாடும். இத்தகைய சூழலில் நோயின் பரவல் வேகம் குறையும் அல்லது நோய் பரவுவது நின்றுவிடும். தண்டு மற்றும் இலைக்காம்புகளில் கரும்பழுப்பு நிறத்திலான, நீரில் நனைந்ததுபோன்ற நோய்க் கருகல் தோன்றும். இவற்றின் மீதும் பூஞ்சை வளர்ச்சி காணப்படலாம். தண்டில் ஏற்படும் நோய்க் கருகல் தாவரத்தின் முழுப் பகுதிகளுக்கும் பரவி, செடி முழுவதும் இறப்பதற்குக் காரணமாகலாம். காய்கள் உருவாகும் எந்த நிலையிலும் நோய்த்தொற்று ஏற்படலாம். பொதுவாக, காயின் காம்பு இணையும் பகுதியிலிருந்து நோய் தொடங்குகிறது. பாதிக்கப்பட்ட காய்களில் ஆலிவ் பழுப்பு நிறத்தில், கரடுமுரடான தோல் போன்ற அமைப்புடைய புள்ளிகள் தோன்றும். இவை பரவி, முழுக் காயையும் பாதிக்கக்கூடும். நோய்த்தொற்று ஏற்பட்ட காய்கள் ஆரம்பத்தில் உறுதியாகவே இருக்கும். அவற்றின் உட்புறத் திசுக்களில் சீரற்ற நிறமாற்றம் காணப்படும். அதிக ஈரப்பதம் உள்ள சூழலில், பாதிக்கப்பட்ட காய்களின் மேற்பரப்பில் வெள்ளை நிறப் பூஞ்சை வளர்ச்சி தோன்றலாம். நோய்த் தழும்புகளில், இரண்டாம் நிலை நுண்ணுயிரிகள் தாக்குவதால், காய்கள் மென்மையாகி அழுகக்கூடும்.

பரிந்துரைகள் (6)
அசோக்சிஸ்ட்ரோபின் 11.5% + மான்கோசெப் 30% (WP)

ஆரம்ப கட்ட அறிகுறிகள் தென்படும் போது

அசோக்சிஸ்ட்ரோபின் 18.2% + டைஃபெனோகோனசோல் 11.4% w/w (SC)
அசோக்சிஸ்ட்ரோபின் 25% + போஸ்காலிட் 35% (WG)
அமிட்டோக்ட்ராடின் 27% + டைமெத்தோமார்ப் 20.27% (SC)
சையாசோபமிட் 34.5% (SC)
மாண்டிபுரோப்பமிட் 23.4% (SC)

செப்டோரியா இலைப்புள்ளி நோய்

செப்டோரியா இலைப்புள்ளி நோய்

காரண உயிரி

Septoria lycopersici

அறிகுறிகள்

இலைகளில் சாம்பல் நிற மையம் மற்றும் கருப்பு ஓரத்துடன் சிறிய வட்ட வடிவப் புள்ளிகள் அதிகமாகக் காணப்படும். அதிக தாக்குதலில் இலைகள் உதிரும். இந்த நோய் தக்காளி இலைகளை அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் தாக்கக் கூடியது.

பரிந்துரைகள் (4)
அசோக்சிஸ்ட்ரோபின் 4.8% w/w + குளோரோதலோனில் 40% w/w (SC)
அசோக்சிஸ்ட்ரோபின் 25% + போஸ்காலிட் 35% (WG)
பிளக்சாபைராக்சாட் 75 g/l + டைஃபெனோகோனசோல் 50 g/l (SC)
மெஃபென்ட்ரிபுளுகோனசோல் 200 g/l + பைராக்ளோஸ்ட்ரோபின் 200 g/l (SC)

பாக்டீரியா வாடல் நோய்

பாக்டீரியா வாடல் நோய்

காரண உயிரி

Ralstonia solanacearum

அறிகுறிகள்

வெப்பமான பகல் நேரங்களில் முதலில் இளம் இலைகளில் வாடுதல் அறிகுறிகள் தோன்றும். மாலையில் வெப்பநிலை குறையும்போது, பாதிக்கப்பட்ட செடிகள் தற்காலிகமாக மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பலாம். சில நாட்களுக்குள் செடிகள் திடீரென வாடி, நிரந்தரமாக வாடிய நிலையிலேயே காணப்படலாம். நோய் வளர்ச்சிக்குச் சாதகமற்ற சூழ்நிலைகளில், செடிகளின் வளர்ச்சி குன்றி, கீழ் இலைகள் மஞ்சளாக மாறிய பின்னர் வாடுதல் ஏற்படலாம். வேர்கள் மற்றும் தண்டின் அடிப்பகுதியில் உள்ள வாஸ்குலார் திசுக்கள் (நீர்க்கடத்தும் திசுக்கள்) பழுப்பு நிறமாக மாறும். இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட வேர்கள் அழுகக்கூடும். பாதிக்கப்பட்ட தண்டை வெட்டி, சுத்தமான நீர் உள்ள பாத்திரத்தில் வைத்தால், வெட்டப்பட்ட பகுதியிலிருந்து மஞ்சள் அல்லது சாம்பல் நிற பாக்டீரியா கசிவு வெளியேறும். கடுமையான பாதிப்பின்போது, இலைகள் பச்சை நிறத்திலேயே இருக்கும்போது செடிகள் விரைவாகவும் முழுமையாகவும் வாடிவிடும்.

பரிந்துரைகள் (1)
காசுகாமைசின் 3% (SL)

இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நிரூபிக்கப்பட்ட முறைகள் எதுவும் இல்லை. காசுகாமைசின் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு ஆகியவற்றைத் தண்ணீரில் கரைத்து பாதிக்கப் பட்ட மற்றும் அதைச் சுற்றியுள்ள செடிகளின் அடித்தண்டு மற்றும் வேர்ப் பகுதி நனையுமாறு ஊற்றுவதன் மூலம், நோய் மேலும் பரவுவதைக் குறைக்கலாம். நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால், சில பருவங்களுக்கு முறையான பயிர் சுழற்சியைப் பின்பற்ற வேண்டும்.

பூசேரியம் வாடல் நோய்

பூசேரியம் வாடல் நோய்

காரண உயிரி

Fusarium oxysporum f.sp. lycopersici

அறிகுறிகள்

இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதே ஆரம்ப அறிகுறியாகும். இது முதலில் கீழ் இலைகளில் தோன்றி, பின்னர் மேல்நோக்கிப் பரவுகிறது. செடியின் ஒரு பக்கத்தில் மட்டும் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது ஆரம்பகட்ட அறிகுறியாகும். இலை நரம்புகளின் இடைநரம்புகள் வெளிர் தன்மையுடனோ அல்லது ஒளி ஊடுருவும் தன்மையுடனோ மாறி, இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். பாதிக்கப்பட்ட இலைகள் கீழ்நோக்கிச் சுருண்டு, பின்னர் பழுப்பு நிறமாக மாறி உலரத் தொடங்குகின்றன. ஆரம்ப நிலையில், செடியின் மேற்பகுதி பகல் நேரத்தில் வாடி, மாலை நேரத்தில் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும். வாட்டம் படிப்படியாகத் தீவிரமடைந்து, இறுதியில் செடி நிரந்தரமாக வாடிவிடும். வாட்டம் அதிகரிக்கும்போது இலைக்காம்புகளும் இலைகளும் தொங்கத் தொடங்குகின்றன. பாதிக்கப்பட்ட தண்டுகள் மற்றும் பெரிய இலைக்காம்புகளில் உள்ள கடத்துத் திசுக்கள் (வாஸ்குலார் திசுக்கள்) பழுப்பு நிறமாக மாறுவதைக் காண முடியும். இளம் செடியிலேயே நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் செடிகளில், நன்கு வளர்ந்த செடிகளை விட பாதிப்பு அதிகமாகக் காணப்படும். அதிகமான பாதிப்பின்போது, இளம் இலைகள் அடுத்தடுத்து இறக்கத் தொடங்குவதுடன், முழு செடியும் வாடி இறந்துவிடும்.

பரிந்துரைகள் (1)
காப்பர் ஆக்ஸிகுளோரைடு 50% (WP)

ஃப்யூசேரியம் வாடல் நோய் மண்ணில் வாழும் பூஞ்சைகளால் ஏற்படுகிறது. பூஞ்சை தாவரத்தின் நீர் மற்றும் ஊட்டச்சத்துகளைக் கடத்தும் வாஸ்குலார் திசுக்களுக்குள் நுழைந்துவிட்டால், பொதுவாக இரசாயன சிகிச்சைகள் மூலம் பாதிக்கப்பட்ட தாவரத்தைக் குணப்படுத்த முடியாது. எனவே, மண்ணில் உள்ள நோய்க்காரணி பூஞ்சையின் அளவைக் குறைப்பதிலும், மேலும் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுப்பதிலும் நோய் மேலாண்மை கவனம் செலுத்த வேண்டும். நோய்த் தாக்குதல் அதிக வெய்யில் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நேரங்களில் அதிகமாக இருக்கும். பேசில்லஸ் சப்டிலிஸ் என்ற உயிரியல் பூஞ்சைக் கொல்லியைக் கொண்டு நாற்றின் வேர்களை நனைத்து நடுவதும், நடவு செய்த 30 நாட்களுக்குள் மண்ணில் இதைப் பயன்படுத்துவதும் நோய் ஏற்படுவதைத் தடுக்க உதவும். நோயின் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், நோய் பரவுவதைக் குறைக்க காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது பொருத்தமான உட்புகும் தன்மை கொண்ட பூஞ்சைக் கொல்லி மருந்தைக் கொண்டு செடிகளின் அடிப்பகுதியில் மண் நனையுமாறு ஊற்றலாம். ஆனால் ஏற்கனவே பாதிக்கப் பட்ட செடிகளைப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

வெர்டிசிலியம் வாடல் நோய்

வெர்டிசிலியம் வாடல் நோய்

காரண உயிரி

Verticillium dahliae

அறிகுறிகள்

நோயின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் செடியின் அடிப்பகுதியில் உள்ள வயதான, கீழ் இலைகளில் தோன்றத் தொடங்கி, படிப்படியாக மேல்நோக்கிப் பரவும். V-வடிவப் புள்ளிகள்: இது இந்நோயின் மிகத் தெளிவான அடையாளமாகும். கீழ் இலைகளின் ஓரங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் (பச்சையம் இழந்த பகுதிகள்) தோன்றும். இவை பொதுவாகத் தலைகீழான “V” வடிவத்தில், இலைகளின் நடுநரம்பை நோக்கி குறுகிச் செல்லும். திசு அழுகல்: நாளடைவில் மஞ்சள் நிறத் திசுக்கள் இறந்து, பழுப்பு நிறமாக மாறி உலர்ந்துவிடும். இறந்த பழுப்பு நிறத் திசுக்களுக்கும் ஆரோக்கியமான பச்சைத் திசுக்களுக்கும் இடையில் தெளிவான மஞ்சள் நிற வளையம் காணப்படும். இலை உதிர்தல்: நோய் தீவிரமடையும்போது, கீழ் இலைகள் முழுமையாக வாடி, காய்ந்து செடியிலிருந்து உதிர்ந்துவிடும். நீர் கடத்தலில் பாதிப்பு: இந்நோயை ஏற்படுத்தும் பூஞ்சை, தாவரத்தின் நீரைக் கடத்தும் சைலம் திசுக்களைத் தாக்குவதால், மண்ணில் போதிய ஈரப்பதம் இருந்தாலும் செடியால் தேவையான நீரை உறிஞ்சி எடுத்துச் செல்ல முடியாமல் போகிறது. பகல் நேர வாட்டம்: பகல் நேரத்தில் வெப்பம் அதிகரித்து, நீராவிப்போக்கு அதிகமாகும்போது செடி வாடும். ஆனால், இரவு நேரத்திலோ அல்லது குளிர்ச்சியான காலை நேரத்திலோ மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பலாம். வளர்ச்சி குன்றுதல்: பாதிக்கப்பட்ட செடிகள் ஆரோக்கியமான செடிகளைவிட உயரம் குறைந்து, வளர்ச்சி மற்றும் வீரியம் குன்றிக் காணப்படும். சீரற்ற அறிகுறிகள்: செடியின் ஒரு பக்கத்தில் மட்டும் அல்லது ஓர் இலையின் ஒரு பகுதியில் மட்டும் அறிகுறிகள் தோன்றலாம். இதற்குக் காரணம், நீரைக் கடத்தும் சில நரம்புத் திசுக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாகும். வாஸ்குலர் திசுக்களின் நிறமாற்றம்: மண்ணின் மேற்பரப்புக்கு அருகில் உள்ள தண்டைப் குறுக்காக வெட்டிப் பார்க்கும்போதோ அல்லது நீளவாக்கில் பிளந்து பார்க்கும்போதோ, தண்டின் வெளிப்புறத்திற்கு அருகிலுள்ள நீரைக் கடத்தும் திசுக்களில் வெளிர் பழுப்பு முதல் மங்கலான பழுப்பு நிறம் வரை நிறமாற்றம் காணப்படும். ஃபியூசேரியம் வாடல் நோயிலிருந்து வேறுபாடு: இந்நோயில் காணப்படும் திசு நிறமாற்றம் பொதுவாக வெளிர் நிறத்தில் இருக்கும். மேலும், இது தண்டில் சுமார் 10–12 அங்குலம் (25–30 செ.மீ.) உயரம் வரை மட்டுமே பரவியிருக்கும். இதற்கு மாறாக, ஃபியூசேரியம் வாடல் நோயில் திசுக்கள் அடர் பழுப்பு அல்லது கருப்பு நிறமாக மாறுவதுடன், நிறமாற்றம் தண்டில் அதிக உயரம் வரை பரவக்கூடும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

சாம்பல் நோய்

சாம்பல் நோய்

காரண உயிரி

Leveillula taurica, Oidium neolycopersici

அறிகுறிகள்

அறிகுறிகள் பொதுவாக கீழ்ப்பகுதியில் உள்ள முதிர்ந்த இலைகளில் தோன்றி, படிப்படியாக மேல்நோக்கிப் பரவுகின்றன. இலைகளின் மேற்பரப்பில் மஞ்சள் நிறத் திட்டுகள் அல்லது புள்ளிகள் தோன்றும். நோய்க்காரணியான பூஞ்சையின் வகையைப் பொறுத்து, இலைகளின் கீழ்ப்புறத்திலோ அல்லது மேற்புறத்திலோ (Oidium neolycopersici) வெள்ளை நிற மாவு போன்ற பூஞ்சை வளர்ச்சி காணப்படும் . பழைய பூஞ்சை வளர்ச்சிகள் காலப்போக்கில் அழுக்குப் படிந்த வெள்ளை நிறமாக மாறும். கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாகி, பின்னர் பழுப்பு நிறமாக மாறி, இறுதியில் சுருங்கி உலர்ந்து விடும். நோய்த்தாக்கம் தீவிரமடையும்போது இலைகள் அதிக அளவில் உதிரும். இதனால் மகசூல் குறைவதுடன், பழங்கள் நேரடி சூரிய ஒளியால் பாதிக்கப்படும் அபாயமும் அதிகரிக்கிறது. பழங்களிலும் வேர்களிலும் வெளிப்படையான நோய் அறிகுறிகள் காணப்படுவதில்லை.

பரிந்துரைகள் (4)
ஹெக்சாகோனசோல் 5.0% + வாலிடாமைசின் 2.50% (SC)
டெபுகோனசோல் 25% (WG)
அசோக்சிஸ்ட்ரோபின் 8.3% + மான்கோசெப் 66.7% (WG)
புப்பிரிமேட் 26.7% w/w (EC)

பழ அழுகல் நோய்

பழ அழுகல் நோய்

காரண உயிரி

Colletotrichum spp.

அறிகுறிகள்

அறிகுறிகள் முக்கியமாக பழுத்த பழங்களில் தோன்றும்; பெரும்பாலும் பழங்கள் மண் அல்லது பயிர் கழிவுகளைத் தொடும் இடங்களில் இவை காணப்படும். பழத்தின் மீது சிறிய, வட்டமான, குழிவான பள்ளங்கள் உருவாகி, 12 மி.மீ விட்டம் வரை பெரியதாக மாறக்கூடும். பாதிக்கப்பட்ட இடம் பொதுவாக பழுப்பு நிறமாக மாறும். மேலும் அதில் சுருள் வட்ட வடிவில் அமைந்த பல கருப்பு நிற பூஞ்சை வித்துகள் (fruiting bodies) காணப்படும். பாதிப்படைந்த பகுதியின் மேற்பரப்பில் இளஞ்சிவப்பு/ஆரஞ்சு) நிறத்திலான பூஞ்சை வித்துக்கள் (spores) தோன்றக்கூடும். இந்த வட்ட வடிவ பாதிப்புகள், ஒன்றோடொன்று இணைந்து அதிகமான பகுதிகளை பாதிக்கக்கூடும். அழுகிய இடங்களில் வெடிப்புகள் ஏற்படலாம், இதனால் மற்ற நுண்கிருமிகள் உள்ளே நுழைந்து பழத்தை மேலும் அழுகச் செய்யும். பச்சையான காய்கள் பாதிக்கப்படும்போது அவை பழுக்கும் வரை எந்தவித அறிகுறிகளையும் வெளியில் காட்டாமல் இருக்கலாம்; இது மறைமுகத் தொற்று (latent infection) என அழைக்கப்படுகிறது. இலைகளில் அறிகுறிகள் தோன்றுவது அரிது; அவ்வாறு தோன்றினால், அவை மஞ்சள் நிற வளையத்தால் சூழப்பட்ட சிறிய, வட்டமான, பழுப்பு நிற புள்ளிகளாகக் காணப்படும். பாதிக்கப்பட்ட வேர்களின் உட்புற திசுக்கள் பழுப்பு நிறமாகி அழுகிக் காணப்படும், மேலும் மேற்பரப்பிற்கு அடியில் பல சிறிய கருப்பு நிற பூஞ்சை அமைப்புகள் இருக்கும். வேர் வளர்ச்சி குறைவதால், செடியின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, செடியின் வளர்ச்சியும் தடைபடும் (stunting).

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

பாக்டீரியா இலைப்புள்ளி நோய்

பாக்டீரியா இலைப்புள்ளி நோய்

காரண உயிரி

Xanthomonas spp.

அறிகுறிகள்

இலைகளில் பொதுவாக 3 மி.மீ.க்கும் குறைவான விட்டமுடைய, சிறிய, கருமையான, நீர் தேங்கியதுபோன்ற வட்ட வடிவப் புள்ளிகள் தோன்றும். ஆரம்பத்தில் இலைகளின் மேற்பரப்பில் எண்ணெய் பசையுடன் காணப்படும் இப்புள்ளிகள், பின்னர் பழுப்பு-கருப்பு நிறமாக மாறி, கோண வடிவத்தைப் பெறும். அதிக எண்ணிக்கையிலான புள்ளிகள் ஒன்றிணைந்து, இலைகளில் பெரிய அளவிலான கருகிய பகுதிகளை உருவாக்கும். பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்துவிடும் அல்லது செடியிலேயே உலர்ந்து காணப்படும். இளம் இலைகள் எளிதில் நோய் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புகள் அதிகம். பாதிக்கப்பட்ட செடி/நாற்றுகளில் இலைப்புள்ளிகள் படிப்படியாக அதிகரித்து, பின்னர் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். கடுமையான தாக்குதலில் இலைகள் உதிர்ந்துவிடும். தண்டுகள் மற்றும் இலைக்காம்புகளில் தோன்றும் புள்ளிகள், இலைப்புள்ளிகளைப் போன்றே காணப்படும். ஆனால், அவை நீள்வட்ட வடிவத்தில் இருக்கும். முதிராத பழங்களில், நீர் தேங்கியதுபோன்ற ஓரங்களுடன் கூடிய சிறிய, சற்றே உயர்ந்த கருப்புப் புள்ளிகள் தோன்றும். பழங்களில் உள்ள புள்ளிகள் பெரிதாகி, பழுப்பு நிறமாகவும், சற்றே பள்ளமாகவும், சொறி போன்ற கரடுமுரடான தோற்றத்துடனும் மாறும். சில நேரங்களில் புள்ளிகளைச் சுற்றி ஒளிவட்டம் போன்ற பகுதியும் காணப்படும். பழங்களில் ஏற்படும் புள்ளிகள் மேலோட்டமானவை; பொதுவாக அவை பழ அழுகலை ஏற்படுத்துவதில்லை. நன்கு பழுத்த பழங்களில் இந்நோயின் தாக்குதல் அரிதாகவே காணப்படும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

பாக்டீரியா புள்ளி நோய்

பாக்டீரியா புள்ளி   நோய்

காரண உயிரி

Clavibacter michiganensis

அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகள் முதலில் தற்காலிகமாக வாடி, பின்னர் நிரந்தரமாக வாடிவிடும். இலைக்காம்பும் தண்டும் இணையும் பகுதியில் வெளிர் நிறக் கோடுகள் தோன்றும். இந்தக் கோடுகள் கணுவிடைப் பகுதிகளில் கீழ்நோக்கியும், இலைக்காம்பின் வழியாக மேல்நோக்கியும் பரவும். தண்டுகள், இலைக்காம்புகள் மற்றும் இலைகளின் நடுநரம்புகளில் புண்கள் போன்ற புள்ளிகள் அல்லது பிளவுகள் உருவாகலாம். தண்டை நீளவாக்கில் வெட்டிப் பார்க்கும்போது மஞ்சள் கலந்த வெள்ளை, மஞ்சள் அல்லது பழுப்பு நிறக் கோடு காணப்படும். பச்சைப் பழங்களில் நீரில் நனைந்தது போன்ற புள்ளிகள் தோன்றும். இப்புள்ளிகளைச் சுற்றி வெள்ளை நிற வளையம் காணப்படும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

மஞ்சள் இலை சுருள் வைரஸ் நோய்

மஞ்சள் இலை சுருள்  வைரஸ் நோய்

காரண உயிரி

Tomato yellow leaf curl virus

அறிகுறிகள்

செடிகளின் வளர்ச்சி கடுமையாகக் குன்றி, கிளைகள் செங்குத்தாக அல்லது மேல்நோக்கி வளரும். இலைகள் அளவில் சிறுத்து, சுருக்கமடைந்து, உருமாற்றம் அடையும். இலைகள் மேல்நோக்கிச் சுருண்டு காணப்படும். இலைகளின் ஓரங்களிலும், நரம்புகளுக்கு இடையிலும் மஞ்சள் நிறமாதல் தெளிவாகக் காணப்படும். பூக்கள் வாடி உதிரலாம். நோய்த்தாக்குதலுக்குப் பிறகு காய்கள் உருவாகும் அளவு பெருமளவில் குறையும். பூக்கும் பருவத்திற்கு முன்பே நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகும் செடிகளில் மகசூல் மிகவும் குறைவாக இருக்கும். நோய்த்தாக்குதலுக்குப் பிறகும் உருவாகும் பழங்களின் வெளித்தோற்றத்தில் எந்தப் பாதிப்பும் காணப்படாது.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

புள்ளி வாடல் வைரஸ் நோய்

புள்ளி வாடல் வைரஸ் நோய்

காரண உயிரி

Tomato spotted wilt virus

அறிகுறிகள்

லேசான நோய்த்தாக்குதலுக்கு உள்ளான நாற்றுகளின் இளம் இலைகளில் வெண்கல நிறம் அல்லது ஊதா கலந்த பழுப்பு நிறமாதல் தோன்றும். இதனைத் தொடர்ந்து, இலைகளில் ஏராளமான சிறிய கரும்புள்ளிகள் உருவாகும். இலைகளின் மேற்பரப்பில் வெண்கல நிறமாதல் பரந்த பகுதிகளுக்குப் பரவக்கூடும். பாதிக்கப்பட்ட இலைப் பகுதிகள் உட்புறமாகச் சுருண்டு, பின்னர் இறந்துவிடும். கடுமையான நோய்த்தாக்குதலுக்கு உள்ளான நாற்றுகளின் வளர்ச்சி குன்றிவிடும். தண்டுகள் மற்றும் இலைக்காம்புகளில் பளபளப்பான அடர் பழுப்பு நிறக் கோடுகள் தோன்றும். செடியின் வளர்ச்சி நுனிகள் கருகி இறக்கக்கூடும். பழங்களில் சுமார் 1 செ.மீ. விட்டமுள்ள புள்ளிகள் தோன்றும். இவை சற்று உயர்ந்து காணப்படும் வட்ட வடிவ அடையாளங்களாக இருக்கும். பழுத்த பழங்கள் உருமாறி, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறப் பட்டைகள் மாறி மாறித் தோன்றும். கடுமையான நோய்த்தாக்குதலால் திசுக்கள் அதிக அளவில் அழுகி இறத்தல் (நெக்ரோசிஸ்) ஏற்பட்டு, இறுதியில் செடி முழுவதும் இறக்கக்கூடும்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

மொசைக் வைரஸ் நோய்

மொசைக் வைரஸ் நோய்

காரண உயிரி

Tomato mosaic virus

அறிகுறிகள்

வளர்ச்சியின் எந்த நிலையிலும் நோய் அறிகுறிகள் தோன்றலாம். செடியின் அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்படலாம். இலைகளில் பொதுவாக வெளிர் பச்சை அல்லது அடர் பச்சை நிறத் திட்டுகள் அல்லது மொசைக் போன்ற நிறமாற்றங்கள் காணப்படும். இளம் இலைகள் உருமாற்றம் அடையும். செடியின் வளர்ச்சிக் குன்றுதல் நோய்த்தாக்குதலின் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும். கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலைகளில், உயர்ந்து காணப்படும் அடர் பச்சை நிறப் பகுதிகளுடன், பன்னீர் இலை (Fern) போன்ற தனித்துவமான தோற்றம் உருவாகலாம். காய்கள் உருவாகும் அளவு பெருமளவில் குறையலாம். பச்சை அல்லது பழுத்த பழங்களில் சதைப்பற்றுள்ள பழச்சுவரின் உட்பகுதி பழுப்பு நிறமாக மாறுதல், மஞ்சள் நிறத் திட்டுகள் மற்றும் இறந்த திசுக்களால் உருவாகும் புள்ளிகள் காணப்படலாம். வைரஸ் தாக்கத்தின் அளவைப் பொறுத்து, இலைகள், இலைக்காம்புகள், தண்டுகள் அல்லது பழங்களில் மஞ்சள் நிறத் திட்டுகள் அல்லது அடர் நிறத்தில் திசுக்கள் இறந்துபோன கோடுகள் தோன்றலாம். ரகம், நோய்த்தாக்குதலின்போது செடியின் வயது, சுற்றுச்சூழல் நிலைகள் மற்றும் வைரஸ் வகை ஆகியவற்றைப் பொறுத்து நோய் அறிகுறிகள் மாறுபடும். உருளைக்கிழங்கு எக்ஸ் வைரஸுடன் இணைந்து இரட்டை வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால், இரட்டை வைரஸ் கோடுகள் எனப்படும் கடுமையான அறிகுறிகள் தோன்றலாம்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை

கண் வடிவ பழ அழுகல் நோய்

கண் வடிவ பழ அழுகல் நோய்

காரண உயிரி

Phytophthora parasitica and P. capsici

அறிகுறிகள்

பச்சை மற்றும் பழுத்த காய்களில், குறிப்பாக பூ முனைப் பகுதியில் (காய்களின் அடிப் பகுதி), பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடர் பழுப்பு மற்றும் வெளிர் பழுப்பு நிறப் பட்டைகள் மாறி மாறி, ஒரே மையத்தைச் சுற்றிய வளையங்கள் போன்று காணப்படும். காயின் வெளிப்புறம் உறுதியாகவும் வழுவழுப்பாகவும் இருக்கும். ஆனால் உட்புறத்தில் அழுகிய திசுக்கள் மிருதுவாகவும் கூழ் போன்றும் மாறும். பாதிக்கப்பட்ட பகுதிகள் பெரிதாகி, காயின் பாதிக்கும் மேற்பட்ட பகுதியை ஆக்கிரமிக்கக்கூடும். இளம் பச்சைக் காய்கள் சுருங்கி, வளர்ச்சி இல்லாமல் காய்ந்து போகலாம். ஈரப்பதம் அதிகமாக இருக்கும் சூழலில், பாதிக்கப்பட்ட காய்களின் மீது வெள்ளை நிறப் பஞ்சு போன்ற பூஞ்சை வளர்ச்சி தோன்ற வாய்ப்புள்ளது. மண்ணைத் தொட்டுக்கொண்டிருக்கும் அல்லது மண்ணுக்கு அருகில் இருக்கும் காய்கள் இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இந்த பூஞ்சைத் தாக்குதலால் நாற்றுகளில் நாற்றழுகல் ஏற்படலாம். மேலும், வெவ்வேறு வயதுடைய செடிகளில் வேர் அழுகல் மற்றும் கழுத்துப்பகுதி அழுகல் ஏற்படலாம். பாதிக்கப்பட்ட வேர்களில் பழுப்பு நிறத்தில், நீர் தேங்கியதுபோன்ற அழுகல் தோன்றி, அவை தண்டின் அடிப்பகுதி வரை பரவும். கடுமையாக பாதிக்கப்பட்ட வேர்களின் திசுக்கள் இறந்து அழுகிய நிலையில் காணப்படும். இளம் செடிகளில் வேர் மற்றும் கழுத்துப்பகுதி பாதிக்கப்படுவதால், செடிகள் விரைவாக வாடிவிடும். தண்டுகளில் வெளிர் பச்சை அல்லது பழுப்பு நிறமான நீளமான அழுகல் போன்ற பகுதிகள் தோன்றும். இவை 15 செ.மீ.க்கும் அதிக நீளமாக இருக்கலாம். ஈரமான சூழலில், தண்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நுண்ணிய பூஞ்சை வளர்ச்சி காணப்படலாம். தண்டைச் சுற்றி நோய்த் தாக்குதல் முழுமையாகப் பரவுவதால், நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களின் கடத்தல் தடைபட்டு, செடிகள் வாடி இறக்கக்கூடும். இந்த நோய் நேரடியாக இலைகளைத் தாக்கா விட்டாலும், தொடர் மழை மற்றும் வெப்பமான சூழலில் இலைக் கருகல் மற்றும் இலை உதிர்வு ஏற்படலாம். இதனைத் தொடர்ந்து செடிகள் முழுமையாக வாடி அழியக்கூடும்.

பரிந்துரைகள் (2)
புரோபினெப் 70% (WP)
மான்கோசெப் 75% (WP)