பூசேரியம் வாடல் நோய் — தக்காளி
Fusarium oxysporum f.sp. lycopersici
அறிகுறிகள்
இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதே ஆரம்ப அறிகுறியாகும். இது முதலில் கீழ் இலைகளில் தோன்றி, பின்னர் மேல்நோக்கிப் பரவுகிறது. செடியின் ஒரு பக்கத்தில் மட்டும் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது ஆரம்பகட்ட அறிகுறியாகும். இலை நரம்புகளின் இடைநரம்புகள் வெளிர் தன்மையுடனோ அல்லது ஒளி ஊடுருவும் தன்மையுடனோ மாறி, இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். பாதிக்கப்பட்ட இலைகள் கீழ்நோக்கிச் சுருண்டு, பின்னர் பழுப்பு நிறமாக மாறி உலரத் தொடங்குகின்றன. ஆரம்ப நிலையில், செடியின் மேற்பகுதி பகல் நேரத்தில் வாடி, மாலை நேரத்தில் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும். வாட்டம் படிப்படியாகத் தீவிரமடைந்து, இறுதியில் செடி நிரந்தரமாக வாடிவிடும். வாட்டம் அதிகரிக்கும்போது இலைக்காம்புகளும் இலைகளும் தொங்கத் தொடங்குகின்றன. பாதிக்கப்பட்ட தண்டுகள் மற்றும் பெரிய இலைக்காம்புகளில் உள்ள கடத்துத் திசுக்கள் (வாஸ்குலார் திசுக்கள்) பழுப்பு நிறமாக மாறுவதைக் காண முடியும். இளம் செடியிலேயே நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் செடிகளில், நன்கு வளர்ந்த செடிகளை விட பாதிப்பு அதிகமாகக் காணப்படும். அதிகமான பாதிப்பின்போது, இளம் இலைகள் அடுத்தடுத்து இறக்கத் தொடங்குவதுடன், முழு செடியும் வாடி இறந்துவிடும்.
பரிந்துரைகள்
ஃப்யூசேரியம் வாடல் நோய் மண்ணில் வாழும் பூஞ்சைகளால் ஏற்படுகிறது. பூஞ்சை தாவரத்தின் நீர் மற்றும் ஊட்டச்சத்துகளைக் கடத்தும் வாஸ்குலார் திசுக்களுக்குள் நுழைந்துவிட்டால், பொதுவாக இரசாயன சிகிச்சைகள் மூலம் பாதிக்கப்பட்ட தாவரத்தைக் குணப்படுத்த முடியாது. எனவே, மண்ணில் உள்ள நோய்க்காரணி பூஞ்சையின் அளவைக் குறைப்பதிலும், மேலும் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுப்பதிலும் நோய் மேலாண்மை கவனம் செலுத்த வேண்டும். நோய்த் தாக்குதல் அதிக வெய்யில் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நேரங்களில் அதிகமாக இருக்கும். பேசில்லஸ் சப்டிலிஸ் என்ற உயிரியல் பூஞ்சைக் கொல்லியைக் கொண்டு நாற்றின் வேர்களை நனைத்து நடுவதும், நடவு செய்த 30 நாட்களுக்குள் மண்ணில் இதைப் பயன்படுத்துவதும் நோய் ஏற்படுவதைத் தடுக்க உதவும். நோயின் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், நோய் பரவுவதைக் குறைக்க காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது பொருத்தமான உட்புகும் தன்மை கொண்ட பூஞ்சைக் கொல்லி மருந்தைக் கொண்டு செடிகளின் அடிப்பகுதியில் மண் நனையுமாறு ஊற்றலாம். ஆனால் ஏற்கனவே பாதிக்கப் பட்ட செடிகளைப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.