பருவம்
மே–ஜூன் மற்றும் நவம்பர்–டிசம்பர்.பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் அதிக மழையோ அல்லது அதிக வெயிலோ நிலவும் சூழலில் விதைப்பதை / நடவு செய்வதைத் தவிர்க்கவும்.
விதை நேர்த்தி
விதை மூலம் பரவும் நோய்கள் மற்றும் நாற்று அழுகல் நோயைத் தடுப்பதற்காக, விதைப்பதற்கு முன் விதைகளை டிரைகோடெர்மா விரிடி (ஒரு கிலோ விதைக்கு 4 கிராம்), சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் (ஒரு கிலோ விதைக்கு 10 கிராம்) அல்லது கார்பென்டாசிம் (ஒரு கிலோ விதைக்கு 2 கிராம்) ஆகியவற்றைக் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.
நாற்று பராமரிப்பு
மேட்டுப் பாத்திகள்: நீர் தேங்குவதைத் தவிர்க்கவும், முறையான வடிகால் வசதியை உறுதி செய்யவும் 10–15 செ.மீ உயரம், 1 மீட்டர் அகலம் மற்றும் தேவையான நீளம் கொண்ட மேட்டுப் பாத்தியை தயார் செய்யவும். நன்கு மக்கிய தொழு உரத்தை மணலுடன் கலந்து நாற்றங்காலில் இடவும். விதைக்கும் முறை: 5 செ.மீ இடைவெளியில் வரிசையாக, 0.5 முதல் 1 செ.மீ ஆழத்தில் விதைகளை விதைத்து, மெல்லிய மண் அல்லது தென்னை நார் கழிவு கொண்டு லேசாக மூடவும். பாதுகாப்பு மற்றும் கடினப்படுத்துதல்: கடுமையான வெயில் மற்றும் மழையிலிருந்து நாற்றுகளைப் பாதுகாக்க லேசான நிழல் அமைப்பை ஏற்படுத்தவும். நாற்றுகளை வேறு நடுவதற்கு 4–5 நாட்களுக்கு முன்னதாக, அவற்றை படிப்படியாக நேரடி சூரிய ஒளி படும்படி செய்து கடினப்படுத்தவும். நாற்று வளர்ப்புத் தட்டுகள்: 98 அல்லது 104 குழிகள் கொண்ட பிளாஸ்டிக் நாற்றுத் தட்டுகளைப் பயன்படுத்தவும். தலைகீழ் கூம்பு வடிவக் குழிகள் கொண்ட தட்டுகள் மிகவும் ஏற்றவை; ஏனெனில் இவை வேர்களின் வளர்ச்சியை கீழ்நோக்கிச் செலுத்தி, வேர்கள் சுருண்டு போவதைத் தடுக்கின்றன. நாற்று வளர்ப்பு கலவை (மீடியா): நாற்றுத் தட்டுகளில் சாதாரண தோட்டத்து மண்ணைப் பயன்படுத்தக்கூடாது. கிருமி நீக்கம் செய்யப்பட்ட, தேங்காய் நார் கழிவு, பெர்லைட் மற்றும் வெர்மிகுலைட் ஆகியவற்றை 3:1:1 என்ற விகிதத்தில் கலந்த மீடியாவைப் பயன்படுத்த வேண்டும். அதிகப்படியான உப்புகளை நீக்கத் தேங்காய் நார் கழிவை நன்கு கழுவி, அதன் pH அளவை 5.5 முதல் 6.5 வரை பராமரிக்கவும். தரமான ரெடிமேட் மீடியா கிடைத்தால் வாங்கிப் பயன் படுத்தவும். தட்டுகளை நிரப்புதல்: தேங்காய் நார் கழிவு கலவை அதிக ஈரம் இல்லாமல், அதே சமயம் வடிவத்தைத் தக்கவைக்கும் வகையில் லேசாக ஈரப்படுத்தவும். கலவையாழ் எல்லாக் குழிகளிலும் சீராக நிரப்பவும். வேர்கள் வளர்வதற்கு காற்று இடைவெளி தேவை என்பதால், கலவையை மிக இறுக்கமாக அழுத்தக்கூடாது. விதைத்தல்: ஒவ்வொரு குழியின் மையத்திலும் ஒரு சிறிய பள்ளத்தை (சுமார் 0.5 செ.மீ ஆழம்) உருவாக்கி ஒரு விதையை மட்டும் விதைக்கவும். விதைகளை உலர்ந்த தேங்காய் நார் கழிவு அல்லது வெர்மிகுலைட் (vermiculite) கொண்டு லேசாக மூடவும். விதைகள் மீடியாவில் நன்றாகப் பதிந்திருக்கும் படி லேசான அழுத்தம் தரவும். முளைப்பு நிலை (இருண்ட/ஈரப்பதமான சூழல்): விதைக்கப்பட்ட தட்டுகளை நிழலான இடத்தில் 5 முதல் 6 அடுக்குகள் வரை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும். ஈரப்பதத்தைத் தக்கவைத்து முளைப்பை விரைவுபடுத்த, அவற்றை 2 முதல் 3 நாட்களுக்கு வெளிச்சம் புகாத பிளாஸ்டிக் தாளால் மூடி வைக்கவும். முதல் சிறிய பச்சை நிற குருத்து இலைகள் வெளியே வரத் தொடங்கியவுடன் (பொதுவாக 3 அல்லது 4-வது நாளில்), தட்டுகளை உடனடியாக ஒரு வலைக்கூடம் அல்லது பாதுகாக்கப்பட்ட கொட்டகையின் கீழ் தனித்தனி அடுக்காகப் பரப்பி வைக்கவும். நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல்: தட்டுகளில் நீர் தேங்காதவாறு நுண்ணிய துளைகள் கொண்ட நீர்ப்பாசனக் கலன் அல்லது தெளிப்பான் மூலம் நாளொன்றுக்கு இருமுறை (வானிலையைப் பொறுத்து) நீரைத் தெளிக்கவும். விதைத்த சுமார் 10–12 நாட்களுக்குப் பிறகு, நாற்றுகள் உறுதியாக வளர்வதை உறுதிசெய்ய 19:19:19 போன்ற சமச்சீர் விகிதத்திலான நீரில் கரையக்கூடிய உரத்தை லிட்டருக்கு 2–3 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். நாற்றுகளை உறுதிப்படுத்துதல் (Hardening Off): நாற்றுகளை வெளிப்புறச் சூழலுக்கு ஏற்றவாறு உறுதிப்படுத்த, அவற்றை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு முந்தைய கடைசி 4–5 நாட்களில், நீர்ப்பாசனத்தைக் படிப்படியாகக் குறைத்து சூரிய ஒளி படும் அளவை அதிகரிக்கவும்.
பயிர் பராமரிப்பு
நிலத்தை முதலில் கல்டிவேட்டர் அல்லது டிஸ்க் கலப்பை (disc plough) கொண்டும், இறுதியாக ரோட்டவேட்டர் கொண்டும் நன்கு பொடியாகுமாறு உழ வேண்டும். கடைசி உழவின்போது, ஏக்கருக்கு 10 முதல் 15 டன் நன்கு மக்கிய தொழுவுரத்தை மண்ணுடன் கலக்க வேண்டும். இடைவெளி: குட்டையாக வளரும் வகைகள்: 60 செ.மீ x 45 செ.மீ அல்லது 75 செ.மீ x 60 செ.மீ. படரும் அல்லது தாங்கி அமைத்து வளர்க்க வேண்டிய வகைகள்: 90 செ.மீ x 45 செ.மீ அல்லது 90 செ.மீ x 60 செ.மீ. நாற்று நடுதல்: நாற்றுக்களை நடும்போது ஏற்படும் அதிர்வைத் தவிர்க்கவும், ஈரப்பதம் இழப்பைக் குறைக்கவும் மாலை வேளையில் நடுவது சிறந்தது. நட்ட உடனேயே லேசாக நீர் பாய்ச்ச வேண்டும். மண்ணின் ஈரத்தைப் பொறுத்து நட்ட மூன்று அல்லது நான்காம் நாள் மண் இறுகுவதைத் தவிர்க்க லேசாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். களை நிர்வாகம் களை வெட்டுவது களையைக் கட்டுப் படுத்துவதுடன், மண்ணின் காற்றோட்டத்தை அதிகரித்து வேர் வளர்ச்சிக்கு உதவும். காளி வெட்ட முடியாத பட்சத்தில், நாற்று நட்ட 1 முதல் 3 நாட்களுக்குள் பெண்டிமெத்தலினை முளைப்பதற்கு முந்தைய களைக்கொல்லியாகப் பயன்படுத்துங்கள். இது பெரும்பாலான காலை விதைகள் முளைப்பதைத் தடுக்கும்.. நாற்று நட்ட 15 முதல் 20 நாட்களுக்குள், மெட்ரிபுசின் களைக் கொல்லியைத் தனியாகவோ அல்லது குய்சலோஃபாப்-ஈத்தைல் களைக்கொல்லியுடன் (குறிப்பாக புல் வகைக் களைகள் அதிகமாக இருந்தால்) சேர்த்தோ பயன்படுத்துங்கள். களைகள் 2-3 இலைகள் கொண்ட நிலையில் இருக்கும்போது தெளிப்பது மிகவும் சிறப்பான கட்டுப்பாட்டை அளிக்கும். ⚠️ பாதுகாப்பு குறிப்பு: இந்தக் களைக்கொல்லிகள் தக்காளிக்குப் பரிந்துரைக்கப்பட்டாலும், பயிரின் மீது நேரடியாகத் தெளிப்பதைத் தவிர்க்கவும். எப்போதும், வரிசைகளுக்கு இடையில் உள்ள களைகளின் மீது படும்படி பாதுகாப்புடன் தெளிக்கவும். மண்ணில் ஈரப்பதம் இல்லாமல் வறட்சியாக இருந்தாலோ அல்லது மேகமூட்டமான/மழைக்காலமாக இருந்தாலோ, மெட்ரிபுசின் சில சமயங்களில் தக்காளி இலைகளில் தற்காலிகமாக மஞ்சள் நிறத்தை ஏற்படுத்தக்கூடும். நீர்ப் பாசனம் : பழங்கள் வெடிப்பதையும் பூக்கள் உதிர்வதையும் தடுக்க, குறிப்பாகப் பூக்கும் மற்றும் பழம் வளரும் பருவங்களில் மண்ணின் ஈரப்பதத்தைச் சீராகப் பராமரிக்கவும். (சொட்டுநீர்ப் பாசனம் மிகவும் ஏற்றது).